Friday, October 25, 2024

படித்ததும் கேட்டதும் – 41

 



 அங்கத்தில் மொய்த்தவா றஞ்சாச் சிறுபூச்சி

சிங்கத்தைச் சீற்றமுறச் செய்யுமே -  நங்காய்

சிறியவையென் றென்றுமுதா சீனப் படுத்தல்

அறிவுடைமை ஆகா தறி.

 

(கருத்து; Vikasa Mantras (Collection), VIHE Ramakrishna Math, Hyderabad.)

Wednesday, October 23, 2024

படித்ததும் கேட்டதும் - 4 0

 

 

 முகத்தில் அழுக்குளதை முன்வருவார் கண்டும்

அகத்துள் நகைகொண் டகல்வார். -  பகரார்

முகம்பார்க்கும் கண்ணாடி முன்னுளதே காட்டும்

நகைக்காது நன்று நமக்கு.



(கருத்து; Vikasa Mantras (Collection), VIHE Ramakrishna Math, Hyderabad.)


Friday, October 18, 2024

படித்ததும் கேட்டதும் -39

 

   

தேடித் தமிழ்ப்பண்கள் தாளங் களையாய்ந்து

வாடுந் தமிழிசைக்கு வாழ்வளிக்க – நாடுவதார்?

கூடித் தமிழ்ப்பாடல் கர்நா டகஇசையில்

பாடி மகிழ்வோர் பலர்.

 

ஈற்றடிக்கு எழுதியது. Tamilauthors.com

Monday, October 07, 2024

‘ஆளுமைக்கோர் விண்மீன்’

 

சென்னை உலகத் திருக்குறள் மையம், குறள் ஞானி, மோகனராசு ஐயாவின் துணைவியார், கு. சாந்தி அம்மையார் நினைவரங்கம்.

வள்ளுவர் கோட்டம் 1.6.2019.

 

குறட்பாக் கவியரங்கம்.

தலைமை;  முனைவர். திரு. குமரிச்செழியன் அவர்கள்.

பொதுத் தலைப்பு; ‘ஆளுமைக்கோர் விண்மீன்’

தனித் தலைப்பு; ‘ஆற்றலாளர்’

 

மோகன ராசுவெனும் முன்செலுத்தும் வள்ளுவத்தேர்ப்

பாகனைநீ நெஞ்சே பணி.

 

ஆற்றலாளர்

 

1.   பன்முக வாற்றலினைப் பெற்றிருந்த சாந்தியெனும்

பெண்மணிக் கீடார் பகர்.

 

   2,  சிற்றூரில் ஊர்வலங்கள் சென்று குறள்பரப்பப்

      பெற்றமன வாற்றல் பெரிது.

 

   3.  விதந்து பிறர்போற்ற வேண்டுதிறன் கொண்டே

      இதழ்ப்பணிகள் செய்தா ரிவர்.

 

   4.  கூட்டங்கள், மாநாட்டில் கொள்கை எதிர்நின்றார்

      போட்டியிடர் போக்கியமை நன்று.

 

   5.  குறள்மைய மேலாண்மை கொண்டியக்கு மாற்றல்

      பிறர்கண்டு போற்றியதைப் பேசு.

 

   6.  ஆசிரியர் மன்றத்தின் ஆய்வுமா நாட்டுரைகள்

      பேசியது வெள்ளப் பெருக்கு.

 

   7.  நுண்மாண் நுழைபுலமும் நூலியற்றும் வல்லமையும்

      கொண்டுபுகழ் கொண்டாரைக் கூறு.

 

   8.  போற்று முழைப்பும் புரிபணியில் தீவிரமும்

      ஆற்று திறமும் அழகு.

 

   9.  குறள்வழிநின் றில்லியக்கிக் காட்டியமை பாரில்

      பிறரும்பின் பற்றும் படி.

 

   10.  ஆற்றல் மிகவுடைய அம்மை புரிந்தபணி

       போற்றி வணங்கும் புவி.

 

 

      சாந்தி அம்மையார் பற்றிய, குறள் ஞானியாரின்       கருத்தோட்டத்தைக் குறள்நடைப்படுத்தியது;

 

         வீரம் அமைதிக்குள் வீற்றிருக்க வீரத்துள்

         ஈரமிருந் தாற்போ லிவர்.

Thursday, October 03, 2024

படித்ததும் கேட்டதும் – 38

 


 

கூரிய பார்வை குறிப்போ டியங்குதிறன்

காரியத்திற் கண்ணிவற்றைக் கண்டறிவாய் --- நேரிழையே

உச்சியிற் கட்டடத்தில் உட்கார்ந்த காகமதை

மெச்சிப் பருந்தென்னல் மிகை.


“A person becomes great not by sitting on some high seat, but through higher qualities. A crow does not become eagle simply by sitting on the top of a palatial building”   -- Chanakya

Vikasa Mantras, VIHE Ramakrishna Math, Hyderabad