என்ன சொல்ல வந்திருப்பாள்
என்றே எண்ணிப் பார்க்கின்றேன்.
எண்ணம் முழுதும்
அதுநின்றும் – இனும்
ஏதும் அறியும் நிலையில்லை.
(என்ன சொல்ல வந்திருப்பாள்?…..
என்னை அங்கே கண்டதுமே
எழுந்தி ருந்து
வந்தேதன்
சின்னக் கையால்
என்கையை – ஒரு
சேரப் பற்றி நின்றனளே!
(என்ன சொல்ல வந்திருப்பாள்?….
அன்னை கண்டு வந்துடனே
அடித்த ழைத்துப்
போய்விட்டாள்.
சின்னக் குழந்தை
கண்கலங்கி – தன்
சிறுவாய் குழறிப்
பின்போனாள்.
(என்ன சொல்ல வந்திருப்பாள்?…..
அன்னை மறுத்த திண்பண்டம்
ஆசை அடக்க இயலாமல்
என்னக் கேட்டுப்
பெறஎண்ணி – என்
எதிரே ஓடி வந்தனளோ?
(என்ன சொல்ல வந்திருப்பாள்?…..
குரங்கு கையால்
தானாகக்
கொட்டு முழக்கும்
சிறுபொம்மை
உறங்க ஓசை தடையென்றே
– தந்தை
ஒளித்து வைத்த துயர்
சொலவா?
(என்ன சொல்ல வந்திருப்பாள்?…..
அண்ணன் போலே தனக்குமொரு
ஆடை புதிதாய்க்
கேட்டதனால்
’என்ன போட்டி இது’என்றே
–அவள்
அண்ணன் அதட்டிப்
போனதையா?
(என்ன சொல்ல வந்திருப்பாள்?….