Monday, December 08, 2014

விடுதலை வேள்வியில் வீரக் கவிஞன்.



புவிபோற்றிடும் படிவாழ்ந்துள புலவோரிடை எங்கள்
கவிபாரதி புகழ்பாடிடக் களமீதினில் வந்தேன்.
அவையோரினை வரவேற்றிரு கரங்கூப்பிடு கின்றேன்.
செவிசாய்த்திடும் படிவேண்டியே சில வார்த்தைகள் சொல்வேன்.


(வேறு)
அச்சமுற்று நாடிழந்து அடிமைமோகம் நெஞ்சிலே
உச்சமாகக் கொண்டபேர்கள் வாழ்ந்தநாளில் தோன்றினான்.
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதுகூட
அச்சமில்லை என்றுபாடி அன்றுவீர மூட்டினான்.


(வேறு)
தந்தையும் பாட்டனும் சேர்த்துவைத்த - பல
தாவர சங்கம செல்வமெல்லாம்
சந்ததி யார்பெற உரிமையுண்டு - என்று
சட்டமு ரைப்பது கண்டிருப்பீர்!
செந்தமிழ் தனிலது 'தாய்நாடு' - செருச்
செய்து மதைப்பெற வேண்டுமென்று
'தந்தையர் நாடெ'னப் பாடிவிட்டன். உரிமை
தாக மெடுத்திடச் செய்துவிட்டான்.


(வேறு)
சூழு கடலுடை பூமி யிதிலெங்கும்
...சாதி யுயர்விலை தாழ்வுமிலை.
வாழு நெறிகளில் ஆணு மொருபெண்ணும்
...வேறிலை ஒன்றெனச் சொல்லிவைத்தான்.
வாழு மனிதர்கள் யாவ ருக்குமிங்கு
...உண்ணும் முணவிட வேண்டுமென்றான்.
பாழு முலகினில் ஏழ்மை யொழியவே
...பாடி யுயர்நிலை எய்திவிட்டான்.


தேச மடைதுயர் போக்கும் வழிதன்னைத்
...தேடித் தமிழினில் பாடியவன்.
மீசை முறுக்கொடு முண்டா சழகின்னும்
...மின்னிச் சுடர்விடும் குங்குமமும்
நேச முடன்மயிர்ப் பீலி தனிற்தொட்டு
...நெஞ்சில் வரைந்துள ஓவியமாய்
பாச மிகுகவி வாண ரிடமெல்லாம்
...பார திநிச்சயம் வாழ்ந்திருப்பான்.

திருவல்லிக்கேணி பாரதி இல்லத்தில் நடைபெற்ற, வானவில் பண்பாட்டு மையம் பாரதி திருவிழாவில், கவியரங்கில்  பாடியது.

Thursday, December 04, 2014

கோடை விடுமுறைத் தொடக்கம்



நோட்டுப் புத்தகம் உணவென்று
... நிறைந்து வழியத் தோள்சேர்த்து
மூட்டை தூக்கி நடக்காமல்
... மூலையில் விட்டு வைத்திடலாம்.
வீட்டுப் பாடம் பொறுப்பென்று
... வேலை எதுவும் கிடையாது.
பாட்டுப் பாடி மகிழ்ந்திடலாம்.
... பலருடன் ஆடிக் களித்திடலாம்.


நாட்டுப் பாடல் பாடுதற்கும்
... 'நாளொரு நீதி' கேட்பதற்கும்
கூட்டி வெளியில் நிறுத்திவைக்கும்
... கொடுமை இனிமேல் கிடையாது.
போட்டித் தேர்வுகள் கிடையாது
... பொழுதை இனிதாய்க் கழித்திடலாம்.
பாட்டுப் பாடி மகிழ்ந்திடலாம்
... பலருடன் ஆடிக் களித்திடலாம்.


பாட்டி தாத்தா பார்ப்பதற்குப்
... பயணம் ரயிலில் சென்றிடலாம்.
கேட்கக் கேட்கத் தின்பண்டம்
... கிடைக்கும் நன்றாய்த் தின்றிடலாம்.
ஓட்டி சைக்கிள் தெருவினிலே
... ஒவ்வொரு நாளும் பழகிடலாம்.
பாட்டுப் பாடி மகிழ்ந்திடலாம்
... பலருடன் ஆடிக் களித்திடலாம்.




 பாரதி கலைக் கழகம். அழ. வள்ளியப்பா நினைவரங்கம். குரோம்பேட்டை இலக்குமி அம்மாள் மேல் நிலைப் பள்ளி. 22.11.2014