பொருளொடு பண்பும் போதையி லழிய
வருதுயர் மீண்டு வரும்வழி யறியா
மனிதரை மயக்கி மதியினை யழித்து
இனியிவர் பயனில ரெனும்படி யாக்கும்
அதுதரு துயரம் அளவிடற் கரியது.
மதுவெனு மரக்கனை மடித்திட வேண்டும்.
பிறப்பி னடியிற் பிரிவுக ளோதி
அறம்பிறழ் செய்கை அளவில தாகப்
பிறர்பகை வளர்க்கும் பேதமை வெல்லத்
திறம்பட முயன்றத் தீமையொ டின்னும்,
மேசைக் கடியில் கைகளை நீட்டி
ஓசையி லாதே உளபொருள் கொள்ளும்
பரவும் லஞ்சப் பழம்பே யுட்பட,
நரகினி லாழ்த்தும் நம்மிடர் விலக,
உரமுள நெஞ்சுட னுறுதியாய்
நரகா சுரர்களை நைப்போம் நாமே.
புதுச்சேரி, ஓசோன் பூம்பொழில் இலக்கிய அமைப்பு நடத்திய, ஆசிரியப்பாப்
போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றது. 4.12.2022.