Friday, March 03, 2017

மங்கலப் பொருள்கள் ஐந்து -- மஞ்சள்.




சொந்தநலம் பாராமல் சோர்வினையும் கருதாமல்
இந்தநில முழுவதிலும் ஏடுகளைத் தேடியவோர்
அந்தணனின் சொந்தமென ஆனதமி ழாரணங்கே
செந்தமிழே! நின்னடிகள் சிரந்தாழ்த்தி வணங்குவனே.

ஆடையால் அணியால் கொண்ட 
   அழகினால் மட்டுந் தாமே
மேடையின் தலைவ ராகி 
   மிகுபுக ழடைந்தோ ருண்டு.   
ஓடைக்குப் பெருமை சேர்க்க
   ஓடிடும் நீரைப் போல
மேடைக்குத் தகுதி சேர்க்கும்
   மேனிலை அறிஞர் வாழி!


இங்குநான் மஞ்சள் பற்றி
   என்கவி கூற வந்தேன்.
மங்களப் பொருள்கள் பற்றி 
   மன்றினில் பாட வந்த
தங்களின் கவிதை கேட்டே
   தமிழைநான் கற்க வேண்டும்.
உங்களுக் கென்வ ணக்கம்
   உரியது ஏற்பீர்! ஐயா!


தொலைக்காட்சி நாடகங்கள்
   தொலையட்டும் என்றொதுக்கி,
      தூக்கம் விட்டு,
கலைநிகழ்ச்சி வேண்டாது
   காரியங்கள் தள்ளிவைத்துக்
      கவிய ரங்கில்
விலையில்லாத் தமிழமுது
   விருந்தென்று தேடிவந்து
      வீற்றி ருக்கும்
கலையாத கூட்டமிதைக்
   கரங்கூப்பி வணங்குகிறேன்
      கவிதை யாலே!


(வேறு)

விக்கினங்க லெதுவொன்று மேற்ப டாமல்
   வினையாற்ற வேண்டுதற்கு நாமெல் லோரும்
அக்காலப் பெரியோர்கள் காட்டிச் சென்ற
   அருமையுள சாத்திரத்து வழியில் நின்று
பக்குவமாய் மஞ்சளினைக் குழைத்துச் சேர்த்துப்
   பிடித்துவைத்த திருவுருவைப் பிள்ளை யாரை
விக்கினத்தை நீக்குகின்ற இறைவன் தன்னை
   விநாயகனை முன்வணங்கித் தொடங்கல் செய்வோம்.


கல்லினிலே மேனியுண்டு தெய்வங் கட்கு.
   காணுகின்ற திருவுருவம் செம்பி லுண்டு
பல்வகையாய் உலோகங்கள் கலந்து வார்த்த
   பலவடிவம் ஐம்பொன்னில் அதிக முண்டு.
சொல்லடுக்கிப் பாடுகின்ற புலவர் நாவில்
   சுரக்கின்ற கவிப்பொருளில் உண்டென் றாலும்
இல்லத்தில் துளிமஞ்சள் தூளில் தோன்றும்
   இறைவடிவே இணையற்ற தென்று சொல்வேன்.


மஞ்சளினைப் பயன்கொள்ளும் தகுதி பெண்கள்
   மங்களமாம் நிலைதன்னைக் காட்டு மன்றோ?
பஞ்சிலினிலே வுருவான நூலென் றாலும்
   பாவையவள் மணநாளில் கழுத்தி லேரும்
மஞ்சளிலே குளித்திட்ட சரட்டுத் தாலி
   மாங்கல்ய மாவதெதன் மகிமை யாலே?
மஞ்சளிலே செய்வதனால் அன்றி வேறு
   மங்கலமாய்க் குங்குமமும் ஆவ தேது?


கொஞ்சம்பேர் விரதங்கள் ஏற்கும் போது
   கார்நிறத்தில் உடையணிதல் உண்டு. இங்கு
கொஞ்சம்பேர் துவராடை அணிவ துண்டு.
   கொஞ்சமுமே இறையுணர்வே அற்ற பேரில்
அஞ்சுநிலை ஆயுளுக்கு வருமென் றாலும் 
   ஆளுகின்ற செல்வம்பறி போமென் றாலும்
மஞ்சளிலே துண்டணியும் மனித ருண்டு.
   மஞ்சளது மகிமைக்கு வேறு வேண்டாம்.


புத்தரிசிப் பொங்கலிடும் தைநன் நாளில்
   பானையிலே கட்டுகின்ற மஞ்சள் கொத்து,
புத்தாடை துணிமணிகள் அணியு முன்னர்
   பொடிமஞ்சள் நீரினிலே தொட்டு வைத்தல்
பத்திரிகை திருமணம்போல் நிகழ்ச்சிக் கெல்லாம்
   பசுமஞ்சள் நிறத்தாளில் அடித்தல் என்று
தத்துவங்கள் பின்புலத்தில் பலவு முண்டு.
   தமிழர்களின் பண்பாட்டுச் சின்னம் மஞ்சள். 


அழைப்பினைப் பாருங்கள்.

(வேறு)

தெரிந்துதான் பழத்தைக் கொண்டு
   தேங்காய்க்கே அடுத்து வைத்தார்.
தரிக்கின்ற தாம்பூ லத்தைத்
    தரத்தினில் நான்காய் வைத்தார்.
அறிந்துதான் குங்கு மத்தை
   அதற்குப்பின் இட்டு வைத்தார்.
புரிந்தது மஞ்சள் என்றும்
   புனிதத்தில் முதல தென்று.


மஞ்சளே மருந்து மாகும்.
   மற்றதன் புனிதந் தன்னால்
மஞ்சளிற் கயிறு கையில்
   மந்திரக் காப்பு மாகும்.
மஞ்சளின் தூளைத் தேய்த்து
   மாதர்கள் குளித்து மேனி
விஞ்சிடும் அழகு காண
   விரும்பியே போற்று வாரே!


மஞ்சநீர் கரைத்து வந்து
   மங்களம் பாட வேண்டும்.
விஞ்சிய சிறப்பி னோடு
   விளங்கிடு பொருள்கள் ஐந்தில்
எஞ்சிய நான்கு மிங்கே
   இனிவர இடத்தை விட்டு
மஞ்சளை முடித்து வைத்து
   மன்றிடை விடைகொள் கின்றேன்.


மதுரை அண்ணா நகர், ராஜாஜி மன்றம். காந்தி ஜயந்தி விழா,  2.10.1999.