மதுரா (வடமதுரை)
மாயவனின் கோயில் மதுரா நகர்தேடிப்
போயங்கு சேவித்த பேறுடையேன் - ஆயனவன்
ஆவினத்தின் பின்போன அன்புடையன் என்போன்ற
பாவிக் கருளுவனோ பார்த்து?
கோவர்த்தனம்
அன்று மழைமறைத் தாயரெலாங் காப்பதற்குக்
குன்றுக் குடைபிடித்த கோவிந்தன் - இன்றுமுன்
இன்னல் மலைகரைய இன்னருள் மாரிபெய்வன்
என்னபயம் நெஞ்சே இயம்பு?
பிருந்தாவனம்
வேதத் தமிழொலிக்கும் வில்லிபுத்துர்ச் சேவையது
கோதை அரங்கனுடன் கூடக் கருடனென
காதம் பலகடந்து கண்டபிருந் தாவனத்தில்
பாதம் பதித்த பயன்.
தேவப்ரயாகை (கண்டங் கடிநகர்)
பொங்கு புனலோடி, பூமி வளங்கொழிக்கும்
கங்கைக் கரையிலங்கு கண்டங் கடிநகரில்
தங்கி அருள்புரியும் தாமரையாள் கேள்வன்தான்
எங்களிறை என்றே இரு.
பத்ரிநாத்
வாவென் றழைத்தது வும்வழிமண் மூடியதும்
ஆவ திதுவென் றறியுமுனர் சென்றங்கு
சேரவழி காட்டியதும் செங்கண்மால் பத்ரியுறை
நாரணனை நெஞ்சே நினை.



