நினைவுப் பேழை தனைத்திறந்து
நிதம்நிதம் தேடிப் பார்க்கின்றேன்.
நிதம்நிதம் தேடிப் பார்த்தாலும்
நினைத்தது மனதில் வரவில்லை.
நெஞ்சைக் கவர்ந்த உருவமது
நினைவை விட்டுப் போய்விடுமோ?
நினைவை விட்டுப் போகுமெனில்
நெஞ்சைக் கவர்ந்த தெனவாமோ? (நினைவுப் பேழை...)
சின்னஞ் சிறிய குழந்தைமுகம்
சிந்திய புன்னகைப் பேரழகு
சிந்திய புன்னகை எழில்முகத்தை
எண்ணிப் பார்க்க முயல்கின்றேன். (நினைவுப் பேழை...)
கன்னக் குழியும் கண்ணழகும்
வண்ணக் குழைப்பில் மின்னியதே!
வண்ணக் குழைப்பில் மின்னியவக்
கண்ணன் முகத்தைக் காணேனே! (நினைவுப் பேழை...)
உதடு குவித்துக் குழலூதும்
உன்னத ரூபம் மறந்திடுமோ?
உன்னதம் நினைவை நீங்கிவிடில்
உதறித் தேடியும் இனிவருமோ? (நினைவுப் பேழை...)
பாரதி கலைக்கழகக் கவியரங்கம் 24.8.2014.