பெண்ணொருத்தி முகத்தழகுக் குவமை யாகப்
...பேரெழில்வான் முழுநிலவைச் சொல்லு தற்கு
விண்ணிலுலா வருகின்ற மீன்க ளெல்லாம்
...வீசுமொளி வெண்மதியோ டியங்கும் போது
மண்ணிலுமோர் நிலவுமுகம் நகரக் கண்டு
...மயங்கிவழி தடுமாறி நின்ற தாக
மண்ணிதனில் வானத்தைக் காட்டு கின்ற
மனங்கவரும் கவிதையினைக் குறளில் கண்டேன்.
மதியும் மடந்தை முகனும் அறியா
பதியிற் கலங்கிய மீன். (குறள்)
மலரிதழ்போல் விரிந்தகன்ற விழிகள் கொண்ட
...மாதரசி அழகுமுகம் உனக்குண் டாயின்
உலவுகின்ற மேகத்தை இழுத்துப் போர்த்தி
...உன்முகத்தை மறைத்துக்கொள் ஒருபோ தும்நீ
பலர்காணும் படிவானில் திரிய வேண்டாம்
...பார்ப்பவரின் கண்படுமென் றொன்றில் கண்டேன்.
நிலவுவந்து வள்ளுவத்தில் நின்று லாவும்
...நெஞ்சுநிறை கவிவரிகட் கீடே இல்லை.
மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்
பலர்காணத் தோன்றல் மதி. (குறள்)
வாசல் கவியரங்கம் 7.12.2008